மிதப்புகள்

என் மனதில் மிதக்கும் எண்ணங்களை உங்கள் கண்களில் விதைப்பதே மிதப்புகளின் நோக்கம்...

Wednesday, 12 December 2012

கருப்பு வேட்டி கட்டி
குளிருல குளிச்சி
செருப்பு போடாம
பீடி சிகரெட் புடிக்காம
தண்ணி வண்ணி குடிக்காம
கெட்ட வார்த்தை பேசாம
பல்ல கடிச்சிக்கிட்டு இருந்து
கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தன்னு சொல்லி
கந்துவட்டிக்குக் கடன வாங்கி
மலைக்குப்   போயிட்டு வந்ததுல
ஒரே லாபம்
பத்துக்காசுக்குப் பொறாத என்ன
எல்லாரும்
சாமின்னு கூப்புட்டதுதான்

.............................................................................................

Thursday, 6 December 2012

பேருந்தில் வந்த  போது
குழந்தையின்
பலூன் வெடித்தது
யாரும் கண்டுகொள்ளவில்லை
கொஞ்சதூரம் போனதும்
பேருந்தின் டயர் வெடித்தது
குழந்தை
அதைக் கண்டுகொள்ளவில்லை 

Monday, 3 December 2012

பேருந்து பயணத்தின் போது
வரிகள் நடுங்க
புத்தகம் படிக்கிறார்கள் சிலர்
அப்போது வரும்
சாலையோர துர்நாற்றத்திற்குச்
சட்டென்று
மூக்கைப் பொத்தாமல்
கடந்து போகிறார்கள்
புத்தகத்தின் நறுமணத்தில்
புதைந்தவாறு

 .....................................................................................