மிதப்புகள்

என் மனதில் மிதக்கும் எண்ணங்களை உங்கள் கண்களில் விதைப்பதே மிதப்புகளின் நோக்கம்...

Tuesday, 28 September 2010

பெரிதினும் பெரிது

நீளம் தாண்டுதலில்
தங்கப் பதக்கம்
வாங்கிய கால்களை விட
உயர்வானது
எறும்புகளை மிதிக்காமலிருக்க
எட்டிக் குதித்த கால்கள்..

சூழ்நிலை



குருவிக் கூட்டின்
தொழில் நுட்பம் கொண்டு
அருவிக் கரையில் வீடு கட்டி
மேகம் தரும்
முதல் நீர் கொண்டு
தாகம் போக்கி
காற்றில் அவிழ்ந்த
பூவின் வாசம்
மூக்கில் மோத
தென்னங்கீற்று
மெல்ல வந்து
கன்னம் தடவ
இரை தேடச் செல்லும்
அதிகாலைப் பறவையின்
இரைச்சலில் கண்விழித்து
வாழ்ந்திடும் ஆசை கொண்ட நான்
வேலை நிமித்தமாய்
மாநகரொன்றில் வாழ்கிறேன்
ஐந்து பேரோடு
அறையைப் பகிர்ந்து ...

Friday, 10 September 2010

ஆச்சர்யம்

மூன்றாவது
பிள்ளைப்பேற்றின் போது
சிக்கலாகி இறந்து போனாளாம்
அத்தாயி பாட்டி
தலைப்பிரசவத்தின் போது
மாரடைப்பு வந்து
கண்ணுக்கு முன்னால்
உயிர் நின்றதாம்
சகுந்தலா அக்காவுக்கு
இதற்கெல்லாம் பயந்து போய்
அறுவை சிகிச்சை மூலம்
குழந்தை பெற்றேன் நான்
இருந்தும்
உயிர்போய் உயிர் வந்துவிட்டது
உதிரப்போக்கு நிற்காமல்
கொஞ்ச நேரம்
எப்படியென்றே தெரியவில்லை
தொடர்ந்து
சுகப்பிரசவமே நடக்கிறது
எங்கள் வீட்டு
நாட்டுப் பசுவுக்கு மட்டும்

இயல்பு

ஒன்று மழையைக்
கொட்டிப்போகிறது
இல்லை வெயிலால்
சுட்டெரித்துக் காய்கிறது
யாராலும்
அண்ணாந்து பார்க்கப்படாத
மாநகரத்து வானம்

முரண்

கொட்டுகின்ற வியர்வையைத்
தருகின்ற கோடை வெயிலைக்
காட்டிலும்
கோபம் அதிகம் தருகிறது
குடிநீரைச் சூடாக்கும்
சாதாரண வெயில்